சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை கொடூரமாகக் கொல்ல உத்தரவிட்டவர் கோத்தபயா. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினரும் வரவேற்றிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபைதீர்மானத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அளித்துள்ளார் கோத்தபயா. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் இன்றுசட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோத்தபயாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கோத்தபயாவின் விஷமப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேணடும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இந்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதுதான் இன்று கோத்தபயா ராஜபக்சே அந்தத் தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசும் அளவுக்குப் போயுள்ளது.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. இது இந்தியா இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது.

தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க முழு உரிமையும் உள்ளது. இதை இந்திய அரசு, இலங்கையிடம் தெரிவித்து கோத்தபயாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசிய கோத்தபயாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீ்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

0 comments:

Post a Comment